
எனக்கு கதை மட்டும் கேட்கத் தெரிந்த நாளில் அதன் அர்த்தங்கள் முழுவதும் விளங்காத நாளில் என் வீட்டின் அருகில் இருந்த பாட்டி சொன்ன பிறகும், சில ஆண்டுகள் கழித்து அதனை இந்திய தொலைக்காட்சியில் இந்தியில் புரியாமல் வியந்து வியந்து பார்த்த பிறகும், பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் அதனை இன்னும் பல பிரமாண்டங்களை இணைந்து பிணைத்து கசக்கி உருட்டித் திரட்டி ஒளி,ஒலி பரப்பிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டும், இன்றும் வியப்பாகவே இருக்கக் கூடிய இந்திய ஒன்றியத்தின் மாபெரும் காவியங்களில் ஒன்றான மகாபாரதம் எனக்கு எப்போதும் புதிராகவே இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், அதன் வாயிலாக இந்திய ஒன்றியத்திற்கு கிடைத்த பகவத் கீதையே.
ஏனெனில் அதில் சொல்லும் கருத்துக்கள் மிகவும் ஆச்சர்யம் தரக்கூடியவையாகவும் தென்பகுதியில் வாழும் மக்களுக்கும் அவர்களது வாழ்வியலிலிருந்தும் வேறுபட்டு இருப்பதாகவும் உணர்வுகள் ஏற்படுவதுண்டு. அவற்றை பொய் என்று நானே சில சமயங்களில் எனக்குச் சொல்லிக் கொள்வதுண்டு. அதனை உறுதி செய்யும் முயற்சியாகவே மூல நூல்களைத் தேடி வாசிக்கும் பணியைத் துவங்கினேன். அது உங்களுக்கும் பயன்படுமே என்று தான் இந்த ஒலிப்பதிவு. பயன்பட்டால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்.
தமிழகத்தில் தமிழரால் எழுதப்பட்ட திருக்குறள் எப்படி இந்த நூல்களிலிருந்து இது சொல்லும் தர்மங்களிலிருந்து தனித்து வேறுபட்டு நிற்கிறது என்பது இன்னும் தேடுதல் பணியின் வேகத்தை அதிகரிக்கத் தூண்டுகிறது.
வியாசரின் மகாபாரதம் – கதையை ஒலிப்பதிவு செய்யும் இப்பணிக்காக.. பேராசிரியர் ஜி.மணி அவர்கள் எழுதிய நூலை அடிப்படையாக பயன்படுத்தி உள்ளேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
இதில் வைக்கப்படும் கேள்விகள் எனக்கு நானே கேட்டுக் கொண்டவை. அக்கேள்விகள் உங்களுக்கும் எழலாம். அதற்கு விடை கிடைத்தால் என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்.