
பக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார்.
இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார்.
ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்’ என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர்.
வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார்.