
ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு
சுமார் ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், இன்றைக்கு துருக்கி என்று வழங்கப்படுகின்ற தேசத்தில் வாழ்ந்தவர் நஸ்ருதீன் ஹோட்ஜா. அவர் ஒரு சூஃபி ஞானி. அவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்வு இது.
ஒருநாள் மதிய நேரம், ஹோட்ஜா தெருவின் ஓரமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் ஹோட்ஜாவின் பின்னால் வந்து அவர் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார்.
ஹோட்ஜா அலறித் துடித்து, “ஏய், யாரது? என்னை ஏன் அடித்தாய்?” என்று கத்தினார்.
“ஓ! என்னை மன்னித்துவிடுங்கள்! நான் என் நண்பரோ என்று நினைத்து அடித்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்றார் அடித்தவர்.
“அப்படியா? அதை வந்து நீதியரசரிடம் சொல்லுங்கள். நான் அவரிடம் புகார் கொடுக்கப்போகிறேன்” என்று கூறி அவரை நீதியரசரிடம் அழைத்துச் சென்றார் ஹோட்ஜா.
ஆனால் அவரை அடித்த அந்த நபரும் நீதியரசரும் நண்பர்கள் என்று ஹோட்ஜாவுக்குத் தெரியாது.
ஹோட்ஜாவின் புகாரைக் கேட்டுக்கொண்ட நீதியராசர், குற்றவாளியாக நின்ற தன் நண்பரை விசாரித்தார் — “நீர் இந்த அப்பாவி மனிதரை அடித்தீரா?”
“ஆம்ம்.. ஆமாம்.. அடித்தேன் ஐயா” என்றார் அவர்.
“அப்படியானால் அவரை அடித்ததற்குத் தண்டனையாக நீர் அவருக்கு ஒண்ணரை காசு அபராதமாக தரவேண்டும்” என்று நீதியரசர் தீர்ப்பளித்தார்.
என்ன.. வெறும் ஒண்ணரை காசுகள் தானா? — நீதியரசரின் ஒருதலைப்பட்சமான அந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்தார் ஹோட்ஜா.
தண்டனை பெற்ற நபரோ தன்னிடம் தற்போது காசு இல்லை என்றார்.
அப்படியானால் வீட்டிற்குப் போய் எடுத்து வந்து ஹோட்ஜாவிடம் கொடுக்குமாறு அவரை அனுப்பிவைத்தார் நீதியரசர்.
தன்னை அடித்த நபருக்கு நீதியரசர் சகாயம் செய்வதை உணர்ந்தார் ஹோட்ஜா. வருத்ததுடன் காத்திருந்தவருக்கு ஒரு யோசனை வந்தது.
நீதியரசரின் முதுகுக்குப் பின்னால் சென்று, ஹோட்ஜா, நீதியரசரின் முதுகில் பளீரென்று ஒரு அடி வைத்தார். “ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு தானே. என்னை அடித்தவர் வந்து தருவதை நீரே வாங்கிக் கொள்ளும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
நீதி தவறியதற்காக அடிபட்டார் நீதியரசர்.
---
கதை மூலம்: Tinkle #001