
சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள். சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய புளியம்பூ மற்றும் கிழவிநாச்சி சிறுகதைகள் முறையே இரண்டாம், மூன்றாம் பரிசைப் பெற்றன. வாய்மொழிக்கதைகள் சொல்லும் கதைசொல்லியின் சாயலில் அவரது தொடக்ககாலக் கதைகள் இருந்தன. முதல் சிறுகதைத் தொகுப்பு பூனைகள் இல்லாத வீடு உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக 2007-ல் வெளிவந்தது. (https://tamil.wiki/wiki/சந்திரா_தங்கராஜ்)