
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.